வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று

2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.அடுத்த ஆண்டுக்கான பாதீடு கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

கடந்த 7 நாட்களாக இடம்பெற்ற விவாதத்தை தொடர்ந்து இன்றைய தினம் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இன்றைய வாக்கெடுப்பின்போது, பாதீட்டு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், சிலர் ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பாதீட்டு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது

நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் இன்றைய தினம் பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பதற்கு முடிவு செய்துள்ளது.

பாதீட்டு திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் இன்றைய தினம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமதுச் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினர் பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாதீட்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *