சிட்னி சிறைக்கு அனுப்பபடும் தனுஷ்க குணதிலக்க

  அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று இரவு சிட்னியில் உள்ள Silverwater சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க , சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதான யுவதியொருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பில் செய்த முறைப்பாட்டின் பேரில் நேற்று (06) அதிகாலை 01 மணியளவில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைதான  தனுஷ்க குணதிலக்க Sydney City பொலிஸாரால் 04 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் பேரில் நேற்று பரமட்டா பொலிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதிலும், பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சிட்னியில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்க, Sydney City பொலிஸாரால் இன்று இரண்டாவது தடவையாக காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வீடியோ தொழிநுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷ்கா சாம்பல் நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும், நீதிமன்றத்தின் முன் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் மட்டுமே அவர் பேசியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தனுஷ்கவின் கைகளில் கைவிலங்குகள் போடப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதவான் றொபர்ட் வில்லியம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனுஷ்க சார்பில் சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் பிணை கோரியிருந்தார்.
எனினும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் அண்மைக்காலமாக கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் வெளிநாட்டவர் என்பதால் தனுஷ்கவிற்கு பிணை வழங்க நீதவான் மறுத்துள்ளார்.

அதன்படி தனுஷ்க 05 நாட்களுக்கு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை , இது தொடர்பில் உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யவுள்ளதாக தனுஷ்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள

எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk

எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *