கொழும்பில் இன்று பிற்பகல் மாபெரும் ஆர்ப்பாட்டமா?

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டத்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02.11.2022) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

மருதானையில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட 15 இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இது என்பதுடன், கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், இன்றைய தினம் வேலை நாள் என்ற போதும் கூட கொழும்பில் அதிகளவில் மக்கள் நடமாட்டத்தை காண முடியாத நிலை காணப்படுகிறது. 

இவ்வாறானதொரு சூழலில் போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் சில வேளைகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியங்களும் இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான இன்றைய மக்கள் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஜே.வி.பி அறிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி யாரால் எதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்றது என்பது தெரியவில்லை என கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாட்டை வெற்றிகொள்ளச் செய்யும் நோக்கில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த போராட்டம் பற்றி தமக்கு எவ்வித புரிதலும் கிடையாது எனவும் இதனால் போராட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை அணி திரட்டி வெற்றிகரமான மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நேற்றைய தினம் ஊடகங்களிடம் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *