தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். முன்னணி ஹீரோக்களே 100 கோடி ரூபாய் வசூல் தர முடியாத நிலையில் இவருடைய படங்கள் அசால்டாக அந்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கு இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள முதல் தெலுங்கு படம் பிரின்ஸ் தான்.
பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் சிவகார்த்திகேயன், அங்கு புதிதாக வேலைக்கு சேரும் பிரிட்டிஷ் பெண்ணை பார்த்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார். சுதந்திரப் போராட்டக் குடும்பமான சிவகார்த்திகேயன் அப்பா சத்யராஜ் பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், பிறகு இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதே பிரின்ஸ் படத்தின் கதை. மிகவும் சிம்பிளான ஒரு கதையை இயக்குனர் அனுதீப் தன்னுடைய ஸ்டைலில் சொல்ல முயற்சித்து இருக்கிறார். அவரது முந்தைய படங்கள் போலவே இந்த படமும் முழுக்க காமெடியை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக சிவகார்த்திகேயன் படத்தில் உள்ள காமெடிகள் இந்த படத்தில் கொஞ்சம் மிஸ் ஆனது போல் தெரிகிறது. உக்ரைன் நடிகை மரியா இந்த படத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன் நண்பர்களாக வரும் பாரத், சதீஷ், ராகுலுக்கு பெரிய வேலைகள் இல்லை. சிவகார்த்திகேயனை தாண்டி இந்த படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது சத்யராஜ் தான், அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் மிகவும் புதிதாகவும் நன்றாகவும் இருந்தது. இவரது காமெடிகள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. வில்லனாக பிரேம்ஜி வித்யாசமான நடிப்பை கொடுத்துள்ளார்.
பிரின்ஸ் படத்தில் பல காட்சிகள் புதிதாக ரசிக்கும் படி இருந்தது. தமன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்த நிலையில் பின்னணி இசையும் நன்றாக உள்ளது. கேமரா வொர்க் மற்றும் எடிட்டிங் கலர்புல்லாக உள்ளது. ஒன்றுமே இல்லாத இந்த கதையில் இன்னும் கொஞ்சம் திரைகதையில் சுவாரஸ்யம் சேர்த்து இருந்தால் நன்றாக வந்திருக்கும். இந்த படத்திற்கு இது போதும் என்று நினைத்து எடுக்கப்பட்டது போல் உள்ளது. பிரின்ஸ் ராஜா ஆகவில்லை