இந்திய இராணுவத்தில் இரகசிய உளவாளியாகப் பணியாற்றிய அப்பா சர்தார் தேசத்துரோகி பட்டத்துடன் காணாமல் போகிறார். அவருடைய மகன் காவல்துறையில் சேர்ந்து நன்றாகப் பணியாற்றினாலும் அப்பாவின் கெட்டபெயர் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.
அதிலிருந்து அவர் மீண்டாரா? சர்தார் என்னவானார்? என்கிற கேள்விகளுக்கான விடைதான் சர்தார்.
இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறார் கார்த்தி. அதிலும் வயதான வேடத்துக்குக் கூடுதலாக மெனக்கெட்டிருக்கிறார். ஒரு கைதியின் டைரியில்
அப்பா கமல், இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தா கமல் ஆகிய வேடங்களுக்கு இணையாக சர்தார் வேடம் நற்பெயர் பெறுகிறது.
ஒன்றுக்கு இரண்டு நாயகிகள் இருந்தும் காதல்காட்சிகள் குறைவு. ஆனால் அந்தக்காட்சிகள் நிறைவு.
ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகள். இருவரின் வேடங்களும் நன்று.வெவ்வேறு காலகட்டம் என்றாலும் நெஞ்சுரமிக்க நேர்மையான இளம்பெண்கள். நன்றாக நடித்து இரசிக்க வைத்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்திருக்கிறார் லைலா. வேலைக்காரன் படத்தில் சினேகா வேடத்தை நினைவுபடுத்தும் வேடம். அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டிருக்கிறார்.
லைலாவின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ரித்விக் சிறப்பு.அவன் வரும் காட்சிகள் வரவேற்புப் பெறுகின்றன.
வில்லனாக நடித்திருக்கும் சங்கிபாண்டே, பெயருக்கேற்ப வேடமும் அமைந்துள்ளது. ஒரே இந்தியா ஒரே பைப்லைன் என்று பெயர் வைத்து இந்தியா முழுக்க தண்ணீர் வியாபாரம் செய்கிறார்.
ஜார்ஜ்வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் தரமாக இருக்கின்றன.
ஜீ.வ.பிரகாஷின் இசையில் ஏறுமயிலேறி பாடல் தாளம் போடவைக்கிறது. பின்னணி இசையைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
வழக்கம்போல் தொடங்கி சலிப்பை ஏற்படுத்தினாலும் மையக்கதைக்குள் படம் வந்ததும் வேகம் பிடிக்கிறது.
தமிழகத்தின் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துவிட்ட விரைவில் சென்னை மற்றும் தமிழகமெங்கும் வரவுள்ள தண்ணீருக்குக் கட்டணம் என்கிற கொடூரத்தின் விதை எண்பதுகளிலேயே போடப்பட்டுவிட்டது என்று சொல்லி மிரள வைக்கிறார் இயக்குநர் மித்ரன்.
அடையாளமின்றி அழிந்துபோனாலும் நாட்டுப்பற்றுடன் பணியாற்றும் உளவாளிகள் பற்றிய விவரணைகள் படத்துக்குப் பலம்.
திரைக்கதையில் அப்பாவின் அவப்பெயர் அப்படியே தொடர்வதும் மகனும் அதையே விரும்பி ஏற்பதும் புதிது
சர்தார்- கார்த்தியின் கம்பீரம்