பாடசாலை கட்டணங்களை மாணவர்களிடமோ, பெற்றோர்களிடமோ கட்டாயப்படுத்தி அறவிடக் கூடாது என கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பாடசாலை மாணவர்களிடம் அங்கிகரிக்கப்படாத கட்டணங்களை பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது-கல்வி அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சுக்களால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர சிறுவர், ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ பணம் அறவிடக் கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளில் முறைசாரா முறையில் பணம் அறவிடப்படுவதைத் தடுக்கும் வகையில் 2015/5 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை வலியுறுத்திய கல்வி அமைச்சின் செயலாளர், பிள்ளைகளின் கல்விக்காக கடுமையான நிதி சிக்கல்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் பாடுபட்டு வரும் நிலையில் இவ்வாறான பணச் செலவுகளை நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார். .

பாடசாலையொன்று பாடசாலை மாணவர்களிடம் தேவையில்லாமல் பணம் கேட்டால் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு எனவும் செயலாளர் வலியுறுத்தினார்.

ஹட்டன் கொட்டகலை போகஹவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் தின நிகழ்வுக்காக 300 ரூபா பணம் தரவில்லை என்ற குற்றச்சாட்டில் பாடசாலை மாணவியை அதிபர் துடைப்பத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் சிலுமின ஞாயிறு நாளிதழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் கல்வி மாவட்டம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாடசாலைக் கட்டணத்தைக் கூட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வற்புறுத்திக் கேட்கக் கூடாது என்றும், பெற்றோரால் அந்தத் தொகையைச் செலுத்த முடியாவிட்டால் கிராம உத்தியோகத்தரிடம் சான்றிதழைச் சமர்ப்பித்து அதைச் செலுத்தாமல் இருக்க முடியும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *