எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் வந்தேவிட்டது.
ஆதித்த கரிகாலனாக திரைமுழுதும் விக்ரம் தோன்றும் காட்சியில் ஒரு மாபெரும் காவியத்தின் தொடக்கம் எனப் புளங்காகிதத்துடன் நிமிர்ந்து உட்காருகிறோம்.
ஆதித்தகரிகாலன் வேடம் இவ்வளவுதானா? இன்னும் இருக்கா? என்று கேட்குமளவுக்கு அந்த வேடத்தின் வீரத்தை,கோபத்தை, ஏக்கத்தை தன் தேர்ந்த நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம். தங்கை த்ரிஷா (குந்தவை) விடம் சீறும் காட்சியில் சிறப்பு. சோழா பாடல் அவருடைய நடனத்துக்குத் தீனி.
வந்தியத்தேவன் கார்த்தி, ஆக்ரோசமாக அறிமுகமாகிறார். ஐஸ்வர்யாராய் (நந்தினி) த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யாலட்சுமி (பூங்குழலி) இளவரசி ஷோபிதா ஆகிய அழகுப்பெண்களிடம் வழிவதும் அவர்களிடம் அடங்குவதும் அழகு. ஆழ்வார்க்கடியான் ஜெயராமுடான காட்சிகள் நகைச்சுவை.
பொன்னியின்செல்வன் என்கிற பெயர் தாங்கிய கதாபாத்திரம் ஜெயம்ரவிக்கு. அதற்கு நியாயமாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார்.
நந்தினி வேடத்தில் வரும் ஐஸ்வர்யாராயின் அழகு மிகவும் ஆபத்தானது என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அதற்கேற்ப காட்சிகள் இல்லை.
குந்தவையாக வரும் த்ரிஷா இந்தப்படத்தில் விக்ரமுக்கு தங்கை ஜெயம்ரவிக்கு அக்கா. அரசகுடும்பத்து மிடுக்குடன் வருகிறார்.தன் குடும்பத்துக்கு எதிராகச் சதியாலோசனை நடக்கும் இடத்துக்கு அவர் வருவதும் அங்கு நடப்பதும் இரசிக்க வைக்கும் காட்சிகள்.
பெரியபழுவேட்டரையாக நடித்திருக்கும் சரத்குமார், பெரிய என்னும் அடைமொழிக்கு உயிர்கொடுத்திருக்கிறார்.
விக்ரம்பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர் உள்ளிட்ட ஏராள நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.
இந்தக்காட்சியில் இவர் வந்துவிட்டார் அடுத்த காட்சியில் யார் வருவார்? என்று எதிர்பார்க்கக்கூடிய வகையில் படம் நெடுக நட்சத்திர பட்டாளம்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையும் அளவு. தமிழ் மன்னர்கள் கதையில் தவிலும் நாதசுரமும் துந்துபியும் கூடுதலாக இருந்திருக்கலாம்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும் கடலோடும் காட்சிகளும் பெரிதாக அமைந்திருக்கின்றன. நடிகர்களுக்கு அண்மைக்காட்சிகளும் நாட்டுக்கும் காட்டுக்கும் தூரத்துக்காட்சிகளும் வைத்து இரசிக்க வைத்திருக்கிறார். சீறும் புலி கொண்ட மரக்கலக்காட்சிகள் பிரமிப்பு.
தோட்டாதரணியின் உழைப்பும் ஸ்ரீகர்பிரசாத்தின் தொகுப்பும் சிந்திக்க வைக்கின்றன.
மிகப்பெரிய நாவலை ஒரு திரைப்படமாக மாற்றும் ஆபத்தான முயற்சியில் இறங்கி அங்கங்கே அடிபட்டு மிதிபட்டு காயம் பட்டாலும் சொல்லைச் செயலாக்கியவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் மணிரத்னம்.
இப்போது மட்டுமன்று ஆயிரம் ஆண்டுகட்கு முன்பும் கூட இரண்டகங்களாலும் பங்காளிச் சண்டைகளாலுமே வீழ்ந்த இனம் தமிழினம் என்பதை வெளிப்படுத்த தமிழ்நாடு இலங்கை ஆகிய இரண்டு நாடுகளோடும் தொடர்புடைய லைகா நிறுவனம் இதைப்படமாக எடுத்திருப்பது பொருத்தம்.