ஆதார் திரை விமர்சனம்

கட்டிட தொழிலாளியான பச்சைமுத்து (கருணாஸ்) தனது மனைவி துளசியுடன் (ரித்விகா) வாழ்ந்து வருகிறார். இவர் பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குழந்தையை பெற்றெடுக்கிறார். துளசியும் இவருக்கு துணையாக மருத்துவமனையில் இருந்த சரோஜாவும் (இனியா) திடிரென காணாமல் போகிறார்கள். இதனை பச்சைமுத்து போலீசில் புகார் செய்கிறார். அந்த புகார் இழுத்தடிக்கப்படுகிறது. குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, “என் மனைவியை கண்டுபிடித்துக்கொடுங்கள்” என்று போலீசாரிடம் கருணாஸ் கெஞ்சுகிறார்.

ஒரு வழியாக போலீஸ் விசாரணை நடத்தி முடித்து கருணாசை அழைத்து, “உன் மனைவி காதலருடன் ஓடிப்போய் விட்டாள்” என்று திடுக்கிடும் தகவலை கூறுகிறார்கள். அதை நம்ப மறுக்கும் பச்சைமுத்து தன் மனைவி தொலைந்துப் போன வருத்தத்தில் இருக்கிறார். இறுதியில் அவருடைய மனைவி என்ன ஆனார்? அவரை எப்படி கண்டுப்பிடிக்கின்றனர்? மனைவிக்கு துணையாக இருந்த சரோஜா யார்? என்பதே படத்தின் மீதிக்கதை. குணச்சித்ர வேடம் ஏற்று நடித்திருக்கும் கருணாஸ் நடிப்பாலும், உடல் மொழியாலும் ஏழை கட்டிட தொழிலாளி பச்சமுத்துவாகவே அவர் மாறியிருக்கிறார். அவருடைய தோற்றமும் உடையும் ஏழை கட்டிடத் தொழிலாளியை நம் கண்முன் நிறுத்துகிறது.

மனைவியை காணவில்லை என்று போலீசிடம் கண்கலங்கியபடி புகார் கொடுக்கும்போதும், முதல்-அமைச்சர் செல்லில் புகார் கொடுத்ததற்காக அந்த முரட்டு போலீசிடம் அடி வாங்கும்போதும், படம் பார்ப்பவர்களின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் சம்பாதிக்கிறார் கருணாஸ். இவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். ரித்விகாவும், இனியாவும் படத்தில் குறைந்த நேரத்தில் வந்தாலும் பாராட்டும் படி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். போலீஸ் ஏட்டுவாக வரும் அருண்பாண்டியன் அவரின் முதிற்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உதவி போலீஸ் கமிஷனராக வரும் உமா ரியாஸ்கான் பயமுறுத்துகிறார். முரட்டு போலீஸ் அதிகாரி வேடத்தில், ‘பாகுபலி’ பிரபாகர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதிகாரவர்கத்திற்கும் பணத்திற்கும் மத்தியில் எளிய மக்கள் எப்படி மாட்டி தவிக்கின்றனர் என்பதை அழகான திரைக்கதையில் கூறியிருக்கிறார் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார்.

விலைமதிப்பற்ற மனித உயிர்களை இழந்து போராடும் சாமானியர்களின் வாழ்க்கை முறையை சரியான நேர்க்கோட்டில் காட்சிபடுத்தியிருக்கிறார். இருந்தும் பிளாஷ்பேக் காட்சிகளை இன்னும் தெளிவாக படமாக்கி இருக்கலாம். படத்தில் சில குறைகள் இருந்தாலும் ஒரு சில இடங்களில் ரசிகர்களின் கைத்தட்டல்களை பெறுகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. தாலாட்டு பாடல், சுகமான ராகம் என்று அவரின் பணியை சிறப்பாக செய்துள்ளார். இயக்குனர் வெளிப்படுத்த நினைத்த விஷயங்களை அழகாக காட்சிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. மொத்தத்தில் ஆதார் – அடையாளம்.

Aadhaar Movie Review
Aadhaar Movie Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *