யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மானியம் வழங்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை விடு்த்துள்ளது.

யாழ் மாவட்ட விவசாயிகள் மண்ணெண்ணையில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் அவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி கடந்த 06.09.2022 அன்று அங்கஜன் இராமநாதன் அனுப்பிய கடிதத்துக்கு விவசாய அமைச்சு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், 2022/2023 பெரும்போகச் செய்கைக்காக யாழ் மாவட்டத்தில் 22,450 ஹெக்டயர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், 4,346,770 லீற்றர் மண்ணெண்ணையும் 897,980 லீற்றர் டீசலும் தேவைப்படுவதாக குறிப்பிட்டு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாட்டுக்கு பொருளாதாரத்தை ஈட்டித்தரும் சின்ன வெங்காய உற்பத்தியில் ஈடுபடும் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணை வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பாராளுமன்றத்தில் கடந்த 01.09.2022 அன்று தெரிவித்தார்.

சின்ன வெங்காயத்தின் இறக்குமதிக்காக பெருமளவு நிதி செலவிடப்படும் நிலையில், யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணையை வழங்குவனூடாக நாட்டுக்கு தேவையான சின்ன வெங்காய உற்பத்தியை யாழ்ப்பாணத்திலிருந்து பெற கூடியதாக இருக்கும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறிப்பாக இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் மீன்பிடி, மற்றும் பெருந்தோட்டத்துறை குறித்தே கவனம் செலுத்தப்பட்டுமையை குறிப்பிட்டு, எமது விவசாயிகளின் நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என அங்கஜன் இராமநாதன் எடுத்துரைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *