ஆசிய கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை – பாகிஸ்தான் இடையேயான ஃபைனல் துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன், தில்ஷான் மதுஷங்கா.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் பதும் நிசாங்கா(8), குசால் மெண்டிஸ்(0), குணதிலகா(1), கேப்டன் தசுன் ஷனாகா(2)ஆகிய நால்வரும் ஏமாற்றமளித்தனர். தனஞ்செயா டி சில்வா நன்றாக ஆடி 28 ரன்கள் அடித்த நிலையில், அவரும் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அதன்விளைவாக 8.5 ஓவரில் 58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
அதன்பின்னர் பானுகா ராஜபக்சாவுடன் ஜோடி சேர்ந்த ஹசரங்கா சில பெரிய ஷாட்டுகளை ஆடி ரன் வேகத்தை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய ஹசரங்கா 21 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்கள் அடித்தார். பொறுப்புடனும் அதேவேளையில் அபாரமாகவும் பேட்டிங் ஆடிய பானுகா ராஜபக்சா அரைசதம் அடித்தார். அதன்பின்னர் டெத் ஓவர்களில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். கடைசி ஓவரின் கடைசி 2 பந்தில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து இன்னிங்ஸை முடித்தார்.
45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்தார் ராஜபக்சா.ராஜபக்சாவின் அதிரடி அரைசதம், ஹசரங்காவின் சிறப்பான கேமியோவால் 20 ஓவரில் 170 ரன்களை குவித்தது இலங்கை அணி.
172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் (5), ஃபகர் ஜமான் (0) ஆகிய இருவரையும் மதுஷன் வீழ்த்தினார். அதன்பின்னர் ரிஸ்வானும் இஃப்டிகார் அகமதுவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து 3வது விக்கெட்டுக்கு71 ரன்களை சேர்த்தனர். இஃப்டிகார் 32ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முகமதுநவாஸ் 9 பந்தில் 6 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்தார். ஆனால் கடைசி 4 ஓவரில் ரன்ரேட் அதிகமாக தேவைப்பட்டதால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் தூக்கி அடித்த ரிஸ்வான் 54 ரன்களில் ஹசரங்காவிடம் கேட்ச் கொடுத்து ரிஸ்வான் ஆட்டமிழந்தார்.
20 ஓவரில் 147 ரன்கள் அடித்து பாகிஸ்தான் தோற்றது. 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.