ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து எதிர்காலத்தில் போட்டியிடும் நிலைமையே காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு தொகுதி அமைப்பாளர் சி.வை.ஜி.ராம் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பு நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.
ஏராளமானோர் இதில் கலந்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கி நாட்டின் அழிவுக்கான கதவைத் திறந்தார்கள். அதனோடு நிற்காமல் சீனி மோசடி, தேங்காய் எண்ணெய் ஊழல், பூண்டு ஊழல் என மோசடிகளுக்கே இடமளித்தார்கள்.
அன்று மத்திய வங்கி மோசடி குறித்து கூச்சலிட்ட தினேஷ் குணவர்தன இன்று பிரதமராக உள்ளார்.
மத்திய வங்கி மோசடியை விட பாரதூரமான சீனி மோசடி குறித்து அரச தரப்பினர் மௌனமாக இருக்கின்றனர். மேலும் ஒட்டுமொத்த மக்களும் இன்று பாரிய அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலை 2019ஆம் ஆண்டு மக்கள் எடுத்த தவறான தீர்மானங்களின் விளைவே ஆகும். இந்நாட்டில் ஜனநாயக உரிமையைக் கோரி போராடிய இளைஞர்களுக்கு எதிராகச் செயற்பட்டு அவர்களை ஒடுக்கி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.