ரஞ்சன் ராமநாயக்க இன்று நிபந்தனையுடன் விடுதலை..
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2021 ஜனவரியில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
நீதிமன்றத்தை அவமதித்ததாக ரஞ்சன் ராமநாயக்க நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியிருந்தார். இந்த நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மன்னிப்புக்கான ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையுடன் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடக்கூடாது என ரஞ்சனுக்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் ரஞ்சனை நேசிக்கும் அனைவரும் இன்று 12 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருமாறு பதிவிடப்பட்டுள்ளது.