இலங்கையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்!

எதிர்வரும் சனிக்கிழமை (27-08-2022)  நடக்கவிருந்த இலங்கை ரக்பி உத்தியோகபூர்வ தெரிவை தற்காலிகமாக ஒத்திவைக்க விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.
குறித்த தேர்தலில் விளையாட்டுக் கழகங்கள் பலவற்றின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை தொடர்பில் விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டு அமைச்சுக்கு சமர்ப்பித்த மேன்முறையீட்டை ஆராய்ந்ததன் பின்னர், இலங்கை ரக்பி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவெடுக்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ தேர்தலில் தமது விளையாட்டு சங்கங்களுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என கடந்த 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள முன்னணி ரக்பி கழகங்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரிடம் முறைப்பாடு செய்திருந்தன.
எதிர்வரும் சனிக்கிழமை (27) நடைபெறவிருந்த ரக்பித் தேர்தலில், தற்போது ஆசிய ரக்பி சம்மேளனத்திலிருந்து தடைசெய்யப்பட்டுள்ள இலங்கை ரக்பி சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் இல்லியாஸ் மாத்திரமே தலைவர் பதவிக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தார்.

  
இந்த நியமனங்களின் அறிவிப்பில், இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பழைய அரசியலமைப்பின் பிரகாரம், இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியமனங்கள் அறிவிக்கப்பட்டதுடன், ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க போதிய அவகாசம் இல்லை என ரக்பி விளையாட்டு சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
ரக்பி சம்மேளனத்தின் புதிய அரசியலமைப்பின் படி, பதவிக்கு போட்டியிடுவதற்கு 30 நாட்களுக்கு முன்னர் நியமனங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
ஆசிய சம்மேளனத்தினால் தடை செய்யப்பட்ட ஒருவர் மீண்டும் இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டாலோ அல்லது தெரிவு செய்யப்பட்டாலோ அங்கத்துவம் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் இலங்கை இழக்க நேரிடும் என அத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இலங்கை ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காக சர்வதேச சம்மேளனங்களின் ஊடாக பெறப்படும் நிதி ஒதுக்கீடுகளும் இடைநிறுத்தப்படவுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒருவரின் ஆசையாலும், பதவிப் பேராசையாலும் இந்நாட்டின் ஒட்டுமொத்த விளையாட்டும் காடுகளுக்குள் தள்ளப்படுகிறது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *