ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சிறப்பான சாதனையை இளம் வீரர் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 289 ரன்களை குவித்தது.
முதல் சதம்
இந்திய அணியின் இந்த அதிக ஸ்கோருக்கு சுப்மன் கில் தான் முக்கிய காரணமாகும். ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் (40), கே.எல்.ராகுல் (30) சிறப்பான அடிதளத்தை அமைத்தனர். இதன்பின்னர் வந்த சுப்மன் கில், ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 97 பந்துகளை சந்தித்த சுப்மன் கில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 130 ரன்களை குவித்தார்.
சாதனை படைப்பு
முதல் சதமட்டுமின்றி முக்கிய சாதனையையும் சுப்மன் கில் இன்று படைத்துள்ளார். ஜிம்பாப்வே மண்ணில் இந்தியர்கள் பெரிய ஸ்கோர் அடிப்பது என்பது மிகவும் அரிதாகவே நடைபெற்றுள்ளது. அந்த மண்ணில் அதிகபட்சமாக கடந்த 1998ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 130 பந்துகளில் 127 ரன்களை குவித்திருந்தார். அதன்பின்னர் யாருமே இதைவிட அதிகமாக அடிக்கவில்லை.
கில் முறியடிப்பு
இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு சுப்மன் கில் இன்று அதனை முறியடித்துள்ளார். 130 ரன்களை அடித்து ஜிம்பாப்வே மண்ணில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதுவரை அங்கு அதிக ஸ்கோர் அடித்தவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
சுப்மன் கில் – 130 ( 2022 )
சச்சின் டெண்டுல்கர் – 127 (130)
அம்பத்தி ராயுடு – 124 (2015)
யுவ்ராஜ் சிங் – 120 (2005)
சுவாரஸ்ய விஷயம்
சுப்மன் கில்லின் இந்த சதத்தின் மூலம் மற்றொரு சுவாரஸ்ய விஷயத்தை கூறியும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது சுப்மன் கில் மற்றும் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சூழலில் இவர் சச்சினின் சாதையை முறியடித்ததை வைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.