சர்வகட்சி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் தற்போதுள்ள அமைச்சரவைக்கு பதிலாக புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சர்வகட்சி ஆட்சி தொடர்பாக அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் நிராகரிப்புகளை கருத்திற்கொண்டு இந்த புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
அடுத்த வாரம் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது…! | New Cabinet Next Week
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியல்
எனினும், இதற்கு முன்னர், புதிய அமைச்சரவை மாற்றத்தில் தமது கட்சி சார்பிலான புதிய அமைச்சர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிபர் ரணிலிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ, கலாநிதி பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த, காஞ்சன விஜேசேகர ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ராஜித சேனாரத்ன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா உட்பட மற்றும் பல சுயாதீன கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இது தொடர்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.