செஞ்சோலைப் படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை(14.8.2022) மாலை நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மேற்படி பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று மாலை-06.05 மணிக்குத் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் திலீபனை நினைவு கூர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாத அராஜகத்தால் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழ்மக்களையும் நினைவு கூர்ந்து ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் கடந்த-2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம்-14 ஆம் திகதி இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சுக்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகளையும், 7 பணியாளர்களையும் நினைவுகூர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட 61 பேரினதும் நினைவாக 61 நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.இறுதியாகத் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நினைவு உரை நிகழ்த்தினார்.
இதேவேளை, குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சு.நிஷாந்தனுடன், தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தீவிர செயற்பாட்டாளர்கள், நல்லூர்க் கந்தன் தரிசனத்திற்காக வருகை தந்திருந்த அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.