கோட்டா எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும்; தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுதி

தமிழினப் படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலகத்தில் எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரைக் கைது செய்யக் கோரும் தமிழர்களுக்கான – நீதிக்கான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய சிறிலங்காவில் இருந்து அதிகாலை வேளையில் இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு எதிராக இலங்கை வாழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த பாரிய போராட்டத்தின் விளைவாக மாலைதீவு அரசாங்கம் கோட்டாபயவை நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவித்திருந்தது.

அதன் பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார். சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபயவை சிங்கப்பூரின் சட்டமா அதிபர் கைது செய்து நீதியின் முன் நிறுத்தக்கோரி சிங்கப்பூரில் உள்ள தமிழர்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த இதேவேளை இப் போராட்டம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த இப் போராட்டம் சிங்கப்பூர் அரசிற்கு பாரிய அழுத்தத்தை கொடுத்திருந்தது என்பது நிதர்சனமான உண்மை.

இதன் காரணமாகவே சிங்கப்பூர் அரசு தனது நாட்டில் தொடர்ந்தும் அடைக்கலம் தர முடியாது என்று கைவிரித்திருந்த நிலையில் வியாழக்கிழமை தாய்லாந்து நோக்கிப் பயணித்திருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ.

மேலும் சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி தாயக, புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த கையெழுத்துப் போராட்டம், இனி தாய்லாந்து சட்டமா அதிபரை நோக்கியதாக மாற்றம் செய்யப்படுவதோடு, முன்னராக பெறப்பட்ட கையொப்பங்கள் அனைத்தும் நீதிக்கான நோக்கத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினரின் பார்வைக்குத் தெரியப்படுத்தப்படுவதற்காக ஈழத்தமிழர்களின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் புலம்பெயர் தேசத்தில் உள்ள பலம்பொருந்திய அமைப்பினருக்கு அவர்களுடைய அதிகாரப் பூர்வமான இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக மின்னஞ்சல்கள் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம், மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகள் கூறியுள்ளன.

1948 ஆம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949 ஆம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ஆம் ஆண்டு Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் கையெழுத்துப் போராட்டத்தின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான – நீதிக்கான போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கெடுத்து உங்களது தார்மீக உரிமையை நிலைநாட்ட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *