ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த மேலசாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். முதுகுளத்தூரில் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். நடிப்பின்மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது மேடை நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார். வங்கியில் வேலை கிடைத்த பிறகு மேடை நாடகங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. வங்கியில் ஓய்வு பெற்ற பின்னர், நடிப்பின்மீது கொண்ட அதீத காதலால் வீட்டார் எதிர்ப்பையும் மீறி திரைப்பட இயக்குநர்கள் பல பேரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த ‘அவன் இவன்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக, தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக வந்தார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.அதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வெளியான தாரை தப்பட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வந்தார்.
இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து திரைப்படங்களின் நடிப்பதை நிறுத்தியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை ராமராஜ் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.