நாட்டிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இரு அணிகளும் மோதிய இந்த போட்டி நாட்டிங்கம் மைதானத்தில் ட்ரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்
ஓப்பனிங் வீரர்கள் ஜேசன் ராய் (25) – ஜாஸ் பட்லர் (18) நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க, இதன் பின்னர் வந்த டேவிட் மாலன் அணியை தூக்கி நிறுத்தினார். 39 பந்துகளை சந்தித்த மாலன் 39 பந்துகளில் 77 ரன்களை சேர்த்தார். இதன்பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டன் 29 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார்.
தொடக்கமே ஏமாற்றம்
216 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களுக்கும், ரிஷப் பண்ட் 1 ரன்னுக்கும் அவுட்டாகி ஏமாற்றினர். விராட் கோலி வழக்கம் போல 11 ரன்களுக்கெல்லாம் நடையை கட்டினார். இதனால் இந்திய அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
காப்பாற்றியது யார்?
அப்போது ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் – சூர்யகுமார் யாதவ் ஜோடி இந்திய அணியை தூக்கி நிறுத்தினர். இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 31 – 3 என இருந்த ஸ்கோர் 150 – 4 என மாறியது. ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களுக்கு வெளியேறினாலும், மறுமுணையில் இருந்த சூர்யகுமார் வாண வேடிக்கை காட்டினார்.
சூர்யகுமாரின் பேட்டிங்
55 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 117 ரன்களை விளாசினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. ஆனால் அவருக்கு உறுதுணையாக எந்த வீரரும் பார்ட்னர்ஷிப் தரவில்லை. இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 198 – 9 ரன்களை மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தொடர் வெற்றி
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் 2- 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி மிகச்சிறப்பான ஃபார்மில் இருப்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.