இலங்கையில் இருந்து இன்று காலை 2 குடும்பங்களைச்சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார சீரழிவால் அங்கு வாழ வழியின்றி அப்பாவி மக்கள் அபயம்தேடி இந்தியாவுக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
அந்தவகையில் இன்று காலை இலங்கை வவுனியா மாவட்டம் பறையாளங்குளத்தைச்சேர்ந்த த.பாலசுகந்தன் (41), மனைவி அனுஜா (35), மகன்கள் பிரசன்னா (10), மேனலக்சன் (08), மற்றும் நெலுக்குளத்தைச்சேர்ந்த த.லிங்கேஸ்வரன் (38), மனைவி பிரதாம்பிகை (40) ஆகியோர் இந்தியாவிற்கு அகதிகளாகச் செல்லத்திட்டமிட்டு தலைமன்னார் வந்தனர்.
நேற்று 10.07.2022- ம் தேதி இரவு 08.00 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து படகுக்கட்டணமாக நான்கு லட்சம் ரூபாய் கொடுத்து பைப்பர்படகில் புறப்பட்டனர். படகோட்டிகள் அவர்களை நள்ளிரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகிலுள்ள ஆதாம்பாலம் மணல்திட்டு பகுதியில் முதலாம் மணல்திட்டில் இறக்கிவிட்டு திரும்பிச்சென்றனர்.
கரைக்கு வரமுடியாமல் பல மணிநேரமாக நடுக்கடலில் மணல்திட்டில் தவித்த அகதிகளை இன்று காலை 9.30 மணிக்கு இந்திய கடலோர காவல்படை ஹோவர்கிராப்ட் கப்பல் வந்து மீட்டு அரிச்சல்முனை கரைக்கு அழைத்துவந்து கடலோர பாதுகாப்பு குழு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அகதிகளை மண்டபம் அழைத்துச்சென்று கடலோர பாதுகாப்பு குழு போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்
இன்றைய தினம் ஆறு இலங்கையர்கள் தனுஷ்கோடி இல் தஞ்சம்.
