இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இல்லை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது 1100 தொன் பெற்றோல் மற்றும் 7500 தொன் டீசல் மட்டுமே உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடனை செலுத்த தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக கருதியுள்ளதாலும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கியிடம் பிணை கோருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் தாங்கி கப்பல் எதுவும் வரவில்லை எனவும், விரைவில் எரிபொருள் தாங்கி வரவில்லையென்றால், பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக செயலிழந்துவிடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சிறிய அளவிலான எரிபொருட்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்றதாக இருக்கும் என்றும் மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான இருப்புகளை வழங்க முடியாததால் மின்வெட்டு மேலும் நீடிக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.