இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து படகில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் பீடி இலைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர். அண்மைக்காலமாக தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை அவ்வப்போது கியூ பிரிவு பொலிஸார், கடலோர பாதுகாப்பு பொலிஸார் மடக்கி பிடித்து வருகின்றனர்.
அதேபோன்று போதை பொருட்கள் கடத்தலும் நடந்து வருகிறது. இதனால் மாவட்ட மரைன் பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி மற்றும் பொலிஸார் இரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொலிஸ் அதிகாரியை பார்த்ததும் கடற்கரையில் இருந்த ஒரு படகு வேகமாக கடலுக்குள் புறப்பட்டு சென்றது. இதைத் தொடர்ந்து பொலிஸார் மீனவர்களின் உதவியுடன், மற்றொரு படகில், கடலுக்குள் சென்ற படகை விரட்டி சென்றனர்.