பட்டினிச்சாவு நோக்கி நகரும் இலங்கை

இலங்கையில் வாழும் ஏழ்மையான 40% குடும்பங்களின் மாத வருமானம் சராசரியாக ரூ.26,931 என்பது புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வறிய நிலையிலுள்ள இக் குடும்பங்கள் 3 வேளை உணவை கற்பனை கூட காண முடியாது. 2020 மற்றும் 2021 கொரோனா தொற்றுநோய் பரவல் ஏற்பட்ட இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்ததுடன், இக் காலப்பகுதியில் நாட்டின் சராசரி குடும்ப மாத வருமானமும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றிற்கு முன்னதாக இலங்கை குடும்பமொன்று சராசரியாக ரூ.76,414 மாத வருமானத்தை ஈட்டியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்துறை வெளியிட்ட தரவுகளில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் முன்னர் 3.7 நபர்களை கொண்ட ஒரு சராசரி குடும்பத்தின் மாத வருமானம் ரூ.75,000 க்கு மேல் இருந்ததாகவும் அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் , நாட்டில் நகர்ப்புறம், கிராமம் மற்றும் மலையக தோட்டப்பகுதிகள் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் இடையே வருமானத்தில் பெரியளவிலான வேறுபாடுகள் உள்ளதையும் அந்த தரவு சுட்டிக்காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் நகர்ப்புற குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.116,670 ஆகவும், கிராமப்புற குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.69,517 ஆகவும், மலையக பெருந்தோட்டத்துறை குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.46,865 ஆகவும் காணப்பட்டது.

2020, 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்காலத்தின் பின்மிகை பணவீக்கத்தின் விளைவாக குடும்ப வருமானம் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக குடும்பங்கள் மே 2022 வரை ஒரு வருடத்திற்குள் தங்கள் பெயரளவு வருமானத்தின் மதிப்பில் 40 சதவீதத்தை இழந்தன.   இலங்கையில் உள்ள வறிய குடும்பங்களில் 20 சதவீதமானவர்கள் ரூ.17,572 மட்டுமே வருமானம் ஈட்டுவதாகவும், 40 சதவீதமானவர்கள் ரூ.26,931 வருமானம் ஈட்டுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அதேசமயம் , இலங்கையில் உள்ள பணக்கார குடும்பங்களில் 20 சதவீதத்தினர் சராசரியாக மாதத்திற்கு ரூ.196,289 சம்பாதிக்கின்றனர். இருப்பினும் கடந்த ஆறு மாதங்களில் பணவீக்கம், விலையேற்றத்தால் அவர்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்துள்ளது.

அத்துடன் நடுத்தர 60 சதவீத குடும்பங்கள் (3.7 நபர்களைக் கொண்டவை) சராசரியாக ரூ.56,079 மாத வருமானத்தை ஈட்டியுள்ளன. இலங்கையில் 80 வீதமான குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த தரவுகள் பிரதிபலிக்கின்றன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *