இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர, இலங்கை மின்சார சபை சட்டத்தை திருத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்தச் சட்டம் 2009 இல் செயற்படுத்தப்பட்டு 2013 இல் திருத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி, மின்சாரக் கொள்முதல் (தனியார் துறையிலிருந்து) போட்டி ஏலம் எடுக்கும் செயல்முறையானது, பொது மக்கள் குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்கின்றதாக அவர் விளக்கினார்.
ஜூன் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த உத்தேச திருத்தம், போட்டி ஏலச் செயல்முறையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதற்கமைவாக, இலங்கை மின்சார சபை சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தை நாடுவதற்கு இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையால் நாளைய தினம் காலை முதல் மின தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.