சாதனை பெண்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் Mithali Raj

சாதனை பெண்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் Mithali Raj

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் மிதாலி ராஜ் (Mithali Raj) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த மிதாலி ராஜ், இன்று (புதன்கிழமை) தனது 39வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்கள் ஆட்டங்களில் இருந்து விடைபெற்றார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மிதாலி ராஜ் முழுமையாக ஆட்சி செய்தார். அவர் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர். ஒரு கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்று தந்தவர் என்ற பெருமை உட்பட பல சாதனைக்கு சொந்தக்காரர் தான் நம்ம மிதாலி ராஜ். 

சாதனை பெண் மிதாலி ராஜ்ஜின் உணர்ச்சிகரமான பதிவு:

39 வயதான மிதாலி ராஜ் ட்விட்டரில் ஜூன் 8 ஆம் தேதி ஒரு நீண்ட செய்தியை வெளியிட்டு தனது ஓய்வை அறிவித்தார். மிதாலி தனது பதிவில், நான் நீல நிற ஜெர்சி அணிந்து எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய போது நான் சிறு குழந்தையாக இருந்தேன். இந்த பயணம் எல்லா வகையான தருணங்களையும் பார்க்கும் அளவுக்கு நீண்டது. கடந்த 23 வருடங்கள் என் வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்றாகும். மற்ற எல்லா பயணங்களையும் போலவே, இந்த பயணமும் முடிவுக்கு வருகிறது. இன்று சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்.

தனது பதிவில் மிதாலி ராஜ், நான் களத்தில் இறங்கும் போதெல்லாம், நான் எப்போதும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தேன். மேலும் அணியை வெற்றிபெறச் செய்வதில் கவனம் செலுத்தினேன். இந்திய அணி மிகவும் திறமையான இளம் வீரர்களின் கைகளில் இருப்பதால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதால், எனது கேரியருக்கு விடைபெற இதுவே சரியான தருணம் என்று நான் உணர்கிறேன். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.

மிதாலி ராஜ் மேலும் கூறுகையில், பல ஆண்டுகளாக நான் அணிக்கு கேப்டனாக இருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்தப் பயணம் இத்துடன் முடிவடைந்தாலும், நான் கிரிக்கெட்டுடன் ஏதாவது ஒரு வடிவில் இணைந்திருப்பேன்” என தனது பதிவில் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

சாதனையின் மற்றொரு பெயர் மிதாலி ராஜ்:

மிதாலி ராஜ் இந்தியா மட்டுமின்றி தற்போது உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையும், இந்திய அணிக்காக நீண்ட காலம் கேப்டன் பதவியில் இருந்த சாதனையும் மிதாலி ராஜ் என்ற சாதனை பெண்ணின் பெயரில் உள்ளது.

மிதாலி ராஜின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி நாம் பேசினால், அவர் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7805 ரன்கள் எடுத்துள்ளார். அதில் மிதாலியின் சராசரி 50.68 ஆக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த பெண் கிரிக்கெட் வீராங்கனையும் இவர்தான். மிதாலி ராஜ் 7 சதங்களும் 64 அரைசதங்களும் அடித்துள்ளார்.

மிதாலி தனது 23 ஆண்டுகால வாழ்க்கையில் 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 43.68 சராசரியில் 699 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரட்டை சதம் (214 ரன்கள்) அடங்கும். மறுபுறம், சர்வதேச டி20 பற்றி பேசினால், அவர் 89 போட்டிகளில் 2364 ரன்கள் எடுத்துள்ளார். மிதாலி டி20 சர்வதேசத்திலும் 17 அரைசதம் அடித்துள்ளார்.

கேப்டனாக அதிக வெற்றிகளை குவித்தவர் என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். 155 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த அவர், 89ல் வெற்றியும், 63ல் தோல்வியும் பெற்றுள்ளார். 150க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த உலகின் ஒரே கேப்டன் மிதாலி ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *