விபத்தில் உயிரிழந்த சிறுவனால் புது வாழ்வு பெற்ற இரு இளைஞர்கள்

அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மூலம் இரு இளைஞர்கள் பார்வைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த தக்ஷித இமேஷ் தனபால என்ற மாணவன் கடந்த மே 31ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மூளைச்சாவு அடைந்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவனின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதுடன், அவரது கண்களில் இருந்து அகற்றப்பட்ட விழிவெண்படலத்தை உடனடியாக கொழும்பில் உள்ள கண் தான தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்கு முன்னர் கொழும்பில் இரண்டு இளைஞர்களுக்கு விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்கள் பார்வையை பெற்றுள்ளனர்.

இலங்கையிலுள்ள பல மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் விழிவெண்படல ஒட்டுதலுக்காக காத்திருப்பதாகவும், இந்த முறையில் கண் தானம் செய்வது ஒரு உன்னத செயல் என்றும் அநுராதபுரம் கிளையில் உள்ள கண் தான சங்கத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சந்தன தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மகனின் கண்களை தானம் செய்து இரு உயிர்களை வாழ வைத்த பெற்றோரின் நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டியுள்ளதுடன், உயிரிழந்த சிறுவனுக்கு பலரும் தமது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *