ரஷ்யா விமானத்திற்கு எதிரான தடை நீக்கப்பட்டது

ரஷ்யாவின் Aeroflot விமானம் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பரிசீலித்ததை அடுத்து இந்த உத்தரவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மனு இன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரஷ்ய அரசுக்குச் சொந்தமான Aeroflot நிறுவனத்தால் இயக்கப்படும் ஏர்பஸ் ஏ 330 – 343, குத்தகை நிறுவனத்துடனான ஏற்பட்ட சட்டப் பிரச்சினையின் காரணமாக ஜூன் 2ஆம் திகதி திட்டமிடப்பட்டபடி கட்டுநாயக்கவில் இருந்து மொஸ்கோவிற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

அதன்போது விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதை அடுத்து ரஷ்ய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 78 விமானங்களை குத்தகை நிறுவனங்கள் பறிமுதல் செய்துள்ளன.
இதில் ஒரு நடவடிக்கையாகவே இலங்கையின் நீதிமன்றில், குத்தகை நிறுவனம், ரஷ்ய வானுார்திக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்திருந்ததாக தெரியவருகிறது.

இந்தநிலையில் இலங்கையில் இருந்து புறப்பட அனுமதி மறுக்கப்பட்ட விமானம் தொடர்பில், ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு, இலங்கைக்கு எச்சரிக்கையை விடுத்திருந்தது.
ரஷ்ய விமானம் தடுத்து வைப்பின் பின்னணியில் சதித்திட்டம்! சந்தேகிக்கும் அரசியல்வாதிகள் 
இருதரப்பு உறவுகளுக்கு இந்த விடயம் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சு எச்சரித்ததுடன், நிலைமையை தீர்க்குமாறு இலங்கையிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய விமானம் தொடர்பில் சட்டமா அதிபர் மனு தாக்கல்
ரஷ்யாவின் Aeroflot விமானம் தொடர்பான வழக்கை இன்று திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து பயணிகளுக்கும் ஏற்படும் அசௌகரியங்கள், இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு இந்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாஸ்கோவிற்கு ஜூன் 2 ஆம் திகதி புறப்படவிருந்த விமானம் கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக இரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம் இலங்கைக்கான தமது சேவைகளை நிறுத்திக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *