தமிழக மக்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களில் யாழ்.மாவட்டத்திற்கான நிவாரண பொருட்கள் ரயில் மூலம் இன்று காலை எடுத்துவரப்பட்டது. இதனை,யாழ் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் பாஸ்கரன் யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசனிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இவை பிரதேச செயலாளர்களினால் ஏற்கனவே பட்டியல்படுத்தப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களிற்கும், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
இதன்படி 50 கிலோ கிராம் நிறையுடைய அரிசி பைகள் மொத்தமாக 6100 கிலோ கொண்டுவரப்பட்டது. இவை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு 240, வேலணை பிரதேச செயலகத்திற்கு 600, ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு 550, காரைநகர் பிரதேச செயலகத்திற்கு 500, யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு 600, நல்லூர் பிரதேச செயலகம், கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு 210, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு 600, சங்கானை பிரதேச செயலகத்திற்கு 600, உடுவில் பிரதேச செயலகத்திற்கு 400, தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு 400, கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு 400, பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு 400 என வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 15KG நிறையுடைய 2,430 பால்மா (ஆவின் பால்மா) பைக்கற்றுக்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
கொண்டு வரப்பட்ட பொருட்கள் ரயில் நிலையத்தில் வைத்து சில பயணாளிகளிற்கு நிகழ்வில் பகிர்ந்தளிக்கப்பட்டன. மற்றைய தொகுதி நிவாரணப் பொருட்கள் அடுத்தவாரமளவில் கொண்டுவரப்படவுள்ளது.