யாழில் மதுபான விடுதியில் இளைஞர் ஒருவர் கொலை: பிரதான சந்தேகநபர் நீதிமன்றில் சரண்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, வல்லையிலுள்ள மதுபான விடுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய நால்வரில் மூவர் ஏற்கனவே நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 24 நாட்களின் பின்னர் பிரதான சந்தேகநபர் தனது சட்டத்தரணி ஊடாக நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

மதுபான விடுதியில் நடந்தது என்ன…! 

கடந்த மே 2ஆம் திகதி இரவு விடுதியில் மதுபானம் அருந்திய இரண்டு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
சம்பவத்தில் திக்கம், நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது 25) என்பவரே கொலை செய்யப்பட்டார்.
சம்பவத்தையடுத்து போத்தலால் குத்தியவர் உள்ளிட்ட நால்வர் தலைமறைவாகிய நிலையில் நெல்லியடிப் பொலிஸார் தேடி வந்தனர். அவர்களில் அல்வாய் கிழக்கைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் வீட்டில் வைத்து இரண்டு நாட்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.

குடத்தனை மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். மற்றையவரும் சில நாட்களின் பின்னர் சரணடைந்தார். சந்தேகநபர்கள் மூவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின்னர் நேற்று தனது சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்துள்ளார்.
சரணடைந்த சந்தேகநபர் போத்தலால் குத்துவதாக வாக்குமூலங்கள் மற்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளதால் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்க நெல்லியடிப் பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனையை முன்வைத்து மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா நீண்ட சமர்ப்பணத்தைச் செய்தார். இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான், பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளையிட்டார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *