மகிந்த ராஜபக்ச மீது நீதிமன்றில் சட்டமா அதிபர் மற்றொரு குற்றச்சாட்டு

நீதிமன்ற உத்தரவை மீறி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர், இதுவரை தமது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர், நீதிமன்றில் இன்று (25) இதனை அறிவித்துள்ளார். கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குற்றப் புலானாய்வு பிரிவு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன மேற்கண்ட விடயத்தை அறிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சு, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட 16 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, மே 12ம் திகதி பயணத்தடை விதித்திருந்தார்.
இதேவேளை, சட்டமா அதிபரின் பணிப்புரையை புறக்கணித்து, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, இடமாற்றம் செய்ய பொலிஸ் திணைக்களம் தவறியுள்ளது.
இதற்கான காரணத்தை விளக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் திலின கமகே, இன்று (25) உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *