பதுளை எரிபொருள் வரிசையில் மோதல் – பஸ் சாரதிக்கு கத்தி குத்து! அறுவர் கைது!!

பதுளையில் வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில், தனியார் பஸ் சாரதியொருவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ்களுக்கு எரிபொருள்களைப் பெற்றுக் கொள்வதற்கு பஸ்கள் வரிசைகள் நின்றன. பின்னாலிருந்து பஸ்ஸொன்று முன்னால் சென்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போது, பெரும் அமைதியின்மையும், பதற்றமும் ஏற்பட்டது.

அத்துடன் வரிசையிலிருந்த பிரிதொரு தனியார் பஸ் சாரதி, முன்னால் சென்று எரிபொருளைப் பெற முயற்சித்த பஸ் சாரதியை, கத்தியினால் வெட்டியதுடன், தமது பஸ்ஸையும் எடுத்துக்கொண்டு கத்தியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த தனியார் பஸ் சாரதியை, பதுளைப் பொலிசார் தடைகளை மீறி 1990 அவசர அம்புலன்சில் ஏற்றி பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் பயனாக மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேரை 23-05-2022 ல் காலை கைது செய்தனர்.

வெட்டுக்காயங்களுக்குள்ளானவர் பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *