இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் நோக்கத்துடன், இந்தியா மற்றும் சீனாவுடன் புதிய கடன் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடங்கவுள்ளது என திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் Sunday times க்கு தெரிவித்துள்ளார்.
தற்போதைய விநியோகம் முடிவடைந்த பிறகு பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை பராமரிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த இரு நாடுகளிடமிருந்தும் தலா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற முயற்சிப்பதாக அவர் கூறினார்.
எரிபொருள் வாங்குவதற்கு இந்தியாவிடமிருந்து இன்னும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மட்டுமே மீதமுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய வெளியுறவு அமைச்சகம் மூலம் திறைசேரிக்கு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் வரவில்லை.
இதேவேளை நாட்டிற்கு தற்போது போதிய அளவு எரிபொருள் கிடைப்பதாலும், அதிக எரிபொருள் இறக்குமதி கிடைப்பதாலும் மக்கள் தட்டுப்பாடு குறித்து அச்சமடைய வேண்டாம் என்றும் அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்தார்.
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் மீண்டும் மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதால் எரிபொருளுக்கான தேவை குறையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.