HND மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – கண்ணீர்ப்புகை – நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக உயர் பட்டதாரி மாணவர் சங்கத்தினால் இன்று சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி உலக வர்த்தக மைய வளாகத்தில் இலங்கை வங்கி வீதியை நோக்கிச் செல்ல முற்பட்ட போதே பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்று சனிக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அனைத்து பல்கலைக்கழக உயர் பட்டதாரி மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் , அதன் அங்கத்தவர்கள் உள்ளிட்டடோருக்கு ஆர்ப்பாட்டப்பேரணியின் போது கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய கோட்டை பொலிஸ் பிரிவில் கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தல் , உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு நுழைதல், அவற்றை சேதப்படுத்தல், வன்முறையாகவும் சட்டவிரோதமான முறையிலும் செயற்படுதல் என்பவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்தோடு கோட்டை பொலிஸ் பிரிவில் என்.எஸ்.ஏ.சுற்று வட்டாரத்திலிருந்து ஷைத்திய வீதி, என்.எஸ்.ஏ.சுற்று வட்டாரத்திலிருந்து ஜனாதிபதி வீதி செரமிக் சந்தியிலிருந்து யோர்க் வீதி சந்தி வரையும், வங்கி வீதி, மேல் ஷைத்திய வீதி, கிரான்ட் ஒரியன்ட் ஹோட்டல் அருகிலுள்ள சந்தியிலிருந்து பிரதான வீதி வரை மற்றும் லேடியன் பெஸ்டியன் வீதி, பாரோன் ஜயதிலக வீதி, முதலிகே வீதி, வைத்தியசாலை வீதி மற்றும் கெணல் வீதி என்பவற்றுக்கு மேற்குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும் நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி பலவந்தமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித்தடைகளை தகர்த்தெறிந்தனர். தமக்கு குறித்த வீதிகள் ஊடாகச் செல்ல இடமளிக்குமாறும் அவர் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இவ்வாறு வீதித்தடைகளை தகர்த்தெறிந்து பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரைத் தாண்டி இவர்கள் ஏனைய வீதிகளுக்குள் செல்ல முற்பட்டதால் இராணுவத்தினரும் ஸ்தளத்தில் குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *