காங்கிரஸ் கட்சியில் இருப்பதை, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு வற்புறுத்தப்படும் மணமகன் போல் உணர்வதாக ஹர்திக் படேல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்த பஞ்சாப் தலைவர் சுனில் ஜாக்கரைப் போல ஹர்திக்கும் வரும் நாள்களில் பாஜகவில் சேரலாம் என்ற யூகங்கள் உள்ளன. ஹர்திக் பாஜகவில் இணைந்தாலும் இல்லாவிட்டாலும், காங்கிரஸில் இருந்து அவர் வெளியேறுவது குஜராத்தில் ஆளும் கட்சிக்கு உதவுமா? இதனால் காங்கிரஸுக்கான பின்னடைவு என்ன? என்பது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்ட போது,
“ஹர்திக் படேல் விலகியது நிச்சயம் காங்கிரஸுக்குப் பின்னடைவுதான். குஜராத்தில் பாஜக ஆளுங்கட்சியாக இருந்தாலும், கடந்த முறைதான் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் குஜராத்தில் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்ப நகர்ப்புறங்களில் உள்ள சீக்குகளின் ஆதரவில் தான் பா.ஜா.க-வே தப்பி பிழைத்தது என்று சொல்லலாம். அந்த அளவில் பாஜக-வின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு ஹர்திக் படேலும், படேல் சமூகமும் உதவி செய்தார்கள்.
இப்போது ராகுல் காந்தி படேல்களை விட பட்டியலின சமூகங்களை நம்புகிறார். பட்டியலின சமூகத்தவரின் எண்ணிக்கை குஜராத்தில் குறைவுதான். ஜித்தேஷ்வர் மேவானியை புகழ்ந்து பேசி, ஹர்திக் பற்றி பேசாததால் தான் ஹர்திக் வெளியே போகிறார். ஹர்திக் படேல் ஒரு தலைவராக வளர்வதை ராகுல் விரும்பவில்லை. இவரை வளர்த்துவிட்டால் கூட நிற்க மாட்டார் என சந்தேகப்படுகிறார். இப்படிதான் ஜெகன் மோகன் ரெட்டி, ஜி.கே.வாசன், சுனில் தாக்ரே என செல்வாக்குள்ள தலைவர்களை சந்தேகப்பட்டு, தனக்கு ஆமா சாமியாக இருக்க மாட்டார்கள் என கருதியே ராகுல் காந்தியின் நடவடிக்கை காங்கிரஸைப் பலவீனப்படுத்தி வருகிறது. வெற்றி பெற்ற பிறகு தான் வெற்றிக்கு யார் பங்கு என பார்க்க வேண்டுமே தவிர, வெற்றிபெற்றால் அவர் பங்கு கேட்டு வந்துவிடுவார், அவரால் வெற்றிக்குக் காரணம் என சொல்லி வெற்றி பெறுவதற்கு முன்பே ஒருவரைத் தட்டிவிடுவது அரசியல் களத்தில் தவறான வியூகம். அந்த தவறான வியூகத்தைத் தொடர்ந்து செய்து வருகிறார் ராகுல் காந்தி” என்கிறவர், “ஹர்திக் விலகியது பாஜக-விற்கு தான் வாய்ப்பாக இருக்கும்” என்கிறார்.
“பஞ்சாபில் சுனில் ஜாக்கர் விலகியது ஜார்ட்டுகள் மத்தியில் பலகீனமாக இருக்கக் கூடிய பாஜக-விற்கு கூடுதல் பலம் போல், ஹர்திக் படேல் விலகியதும் பலமாக இருக்கக் கூடிய காங்கிரஸின் பலகீனம், பாஜக-விற்கு இது லாபமாக இருக்கும்” என்கிறார், ரவீந்திரன் துரைசாமி.