உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இறுதிக்கட்டத்தைத் தொட்டு விட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதை ஒப்புகொள்ள மறுக்கும் மொஸ்கோ, டொன்பாஸ் மீது வலுவான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
ரஷ்யா அதன் முன்னேறித் தாக்கும் சக்தியையும், தரைப்படையில் மூன்றில் ஒரு பங்கையும் இழந்து விட்டதாக பிரிட்டிஷ் புலனாய்வுக் குழு கூறியுள்ளது.
ரஷ்யா விரைவில் இரண்டாயிரம் போர்க் காலப் படைவீரர்களைக் களமிறக்கவிருப்பதாகவும் கீவ் தெரிவித்துள்ளது.
டொன்பாஸின் நுழைவாயிலாகக் கருதப்படும் இஸியம் பகுதியில் உக்ரேன் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரேன் ஆளில்லா வானூர்திகள் மூலம் ரஷ்ய டாங்கிகளைத் தாக்கி வருகின்றது.
கார்க்கீவின் இன்னொரு பகுதியில் ரஷ்யாவின் வசமிருந்த ருஸ்கா லொஸொவா கிராமத்தை உக்ரேனியப் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
ரஷ்யர்கள் வெகு விரைவில் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறியதால் கண்ணிவெடிகளை வைக்கக்கூட அவர்களுக்கு நேரமிருக்கவில்லை என்று உக்ரேனியப் படையினர் தெரிவித்துள்ளனர்.