முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள், நாளை கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், அரச படையினரும், பொலிசாரும், முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில், நாளைய நிகழ்வுக்கான ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று நண்பகல் முதல் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இராணுவம், பொலிசார் அப்பகுதிகளை சூழ நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் உள்ளக வீதிகள் மற்றும் நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையான பகுதிகளில் பொலிசார் ,இராணுவம், புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுள்ளது.
அத்துடன், நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மக்கள் செய்து கொண்டிருந்த போது, நினைவேந்தல் வளாகத்தை சுற்றி இராணுவ அதிகாரி ஒருவருடைய வாகனம் உள்ளிட்ட இரண்டு இராணுவ வாகனங்கள் அங்குமிங்கும் சுற்றி திரிந்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், அனைவரையும் அணி திரளுமாறு, நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றுவரை நீதி வழங்கப்படாத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்.
அனைவரும் பேதங்களைத் துறந்து, சுயலாப, சுய விளம்பரப்படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.” என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் கோரியுள்ளனர்.